பிதிர்காட்டில் பூட்டி கிடக்கும் நூலகம் திறக்கப்படுமா


பிதிர்காட்டில் பூட்டி கிடக்கும் நூலகம் திறக்கப்படுமா
x
தினத்தந்தி 11 Sept 2021 9:39 PM IST (Updated: 11 Sept 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

பிதிர்காட்டில் பூட்டி கிடக்கும் நூலகம் திறக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பிதிர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு வசதியாக நூலக வசதி இல்லாமல் இருந்தது. 

இதனால் பிதிர்காட்டில் நூலகம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் நூலகம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து செயல்பட்டு வந்த அந்த நூலகம் மாணவ-மாணவிகள் உள்பட பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் அதன்பிறகு ஏதோ சில காரணங்களால் திடீரென நூலகம் மூடப்பட்டது. அதன்பிறகு திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டாலும் முறையாக பதில் அளிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

நாங்கள் படிக்க உதவியாக எங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் அருகில் நூலகம் கட்டி தரப்பட்டது. இதன் மூலம் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி வந்தோம்.

இதற்கிடையில் திடீரென நூலகத்தை மூடிவிட்டனர். அதன்பிறகு திறக்கப்படாததால், அதிர்ச்சி அடைந்து உள்ளோம். அதற்கான காரணத்தையும் அதிகாரிகள் சரியாக தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் மட்டுமின்றி படிப்பின் மீது ஆர்வம் கொண்ட பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூட்டியே கிடப்பதால் அங்குள்ள புத்தகங்கள், மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை வீணாகி சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே நூலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story