திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
136 இடங்களில் முகாம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகள் என 136 இடங்களில் 45 ஆயிரம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் என 700 பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். தொழில்துறையினருக்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களும் தடுப்பூசி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
4 மண்டலங்களிலும் தடுப்பூசி நடைபெறும் இடங்கள் குறித்து பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையாக வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது வரை மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மூலமாக 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2,500 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 138 இடங்களில் கோவிஷீல்டு முதல், 2-வது தவணை தடுப்பூசியும், 17 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு துண்டுபிரசுரம்
முன்னதாக நேற்று காலை பழைய பஸ் நிலையம், ராஜவீதி, கருவம்பாளையம், புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி பகுதியில் பஸ் பயணிகள், தேநீர் கடை உரிமையாளர்கள், காய்கறி வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக விழிப்புணர்வு நோட்டீசை மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். உதவி ஆணையாளர்கள் கண்ணன், வாசுகுமார், செல்வநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story