பயணிகளை ஏற்றுவதில் தகராறு; கண்டக்டர்கள் மோதல்


பயணிகளை ஏற்றுவதில் தகராறு; கண்டக்டர்கள் மோதல்
x
தினத்தந்தி 11 Sep 2021 4:22 PM GMT (Updated: 11 Sep 2021 4:22 PM GMT)

திண்டிவனத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர்கள் மோதிக்கொண்டனர். நடுரோட்டில் பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம், 

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதிதான் தற்காலிக பஸ் நிலையமாக செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு காலை 11.35 மணிக்கு வந்து நின்றது. அதே சமயம் காஞ்சீபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ்சும் வந்து நின்றது. 
அப்போது பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரான பென்னாகரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 47) என்பவருக்கும், தனியார் பஸ் கண்டக்டரான காஞ்சீபுரம் அஸ்தினாபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 

போக்குவரத்து பாதிப்பு 

இதனால் அரசு பஸ் டிரைவர், பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதன் காரணமாக திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மாயமானது. இந்த மோதலில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். முன்னதாக அரசு பஸ்சில் வந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்சில் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story