மக்கள் நீதிமன்றம் மூலம் 682 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 682 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Sept 2021 9:52 PM IST (Updated: 11 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 682 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கினார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கிக் கடன் தொடர்பான வழக்குகள், 

சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன நஷ்ட ஈடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ஸ்ரீதர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை எடுத்து சமரசத் தீர்வு கண்டனர். 

கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதிபதி ஜெயபிரகாஷ் தலைமையிலும், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி லிங்கம் தலைமையிலும், கூடலூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி வெங்கட சுப்பிரமணியம் தலைமையிலும், பந்தலூர் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் வழக்காடிகள், வங்கி மேலாளர்கள், மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர். வங்கி வாரா கடன் வழக்குகளில் 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்பட்டன. நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 648 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 

வங்கிகளில் வாராக்கடன் சம்பந்தமான 118 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 34 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. மொத்தம் 1,082 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 682 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story