கோத்தகிரி நகரில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி நகரில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் மைய பகுதிகளான பஸ்நிலையம், காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா வளாகத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. தொடர்ந்து அங்கேயே முகாமிட்ட கரடி, அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை தாக்கும் அபாயம் இருந்தது.
இதனால் அந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் சிக்கிய கரடியை அப்பர் பவானி வனப்பகுதியில் கொண்டு விட்டனர். சமீபத்தில் கோத்தகிரி மாதா கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் இருந்து வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த மாணவர்களை கரடி துரத்தியது.
இந்த நிலையில் நேற்று காலையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள கடைவீதி பள்ளிவாசல் சாலையில் கரடி ஒன்று உலா வந்தது. மேலும் பஸ் நிலையம் பகுதி மற்றும் மாதா கோவில் சாலையிலும் அந்த கரடி உலா வந்தது. பகல் நேரங்களில் சாலையில் உலா வந்த கரடியால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இது மட்டுமின்றி ஏற்கனவே ஒரு கரடி பிடிபட்ட பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா வளாகத்திற்குள் மீண்டும் மற்றொரு கரடி நுழைந்தது. தொடர்ந்து அங்கு தரம் பிரிக்க கொட்டி வைக்கப்பட்டு உள்ள குப்பை குவியலில் இருந்து உணவு பொருட்களை தின்றது. பின்னர் அருகில் உள்ள முருகன் காலனி குடியிருப்பு பகுதிக்குள் சென்றது.
இதுபோன்று நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடி வரும் கரடிகள் தாக்கி பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story