909 மையங்களில் இன்று சிறப்பு முகாம் தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சுகாதாரத்துறையினருக்கு அதிகாரி அறிவுரை


909 மையங்களில் இன்று சிறப்பு முகாம் தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சுகாதாரத்துறையினருக்கு அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 11 Sept 2021 9:58 PM IST (Updated: 11 Sept 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 909 மையங்களில் நடக்கும் சிறப்பு முகாமிற்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு கண்காணிப்பு அதிகாரி சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர், 

சிறப்பு முகாம்

தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 3.69 கோடி பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.94 கோடி பயனாளிகள் முதல் தவணை தடுப்பூசியும், 75.37 லட்சம் பயனாளிகளுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை, அடுத்த நிலைக்கு துரிதப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இந்த தடுப்பூசி முகாம் 909 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கண்காணிக்க கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

இந்த நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நடத்தி, நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி முகாம் எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்திட அனைத்து வட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 8 குழுக்கள், வட்டார வாரியாக உள்ள பொறுப்பு அலுவலர்கள், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

நடவடிக்கை

மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து மையங்களிலும் பொதுமக்கள் வருகைக்கு ஏற்றாற்போல் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகளை வழங்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், விருத்தாசலம் சப்-கலெக்டர் அமித்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story