கனகராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீஸ் ஐ.ஜி. விசாரணை


கனகராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீஸ் ஐ.ஜி. விசாரணை
x
தினத்தந்தி 11 Sep 2021 5:18 PM GMT (Updated: 2021-09-11T22:48:13+05:30)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் விசாரணை நடத்தினார்.

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் விசாரணை நடத்தினார்.

வழக்கு சூடுபிடிக்கிறது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சயான், ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். மேலும் வழக்கில் முழு விசாரணை நடத்த போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியது. தொடர்ந்து வழக்கில் முழு உண்மையை வெளியே கொண்டுவர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. 

2 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் அரசு தரப்பில் 103 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 41 பேரிடம் ஊட்டி கோர்ட்டில் விசாரணை முடிந்தது. மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை. தற்போது மீண்டும் சாட்சிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கனகராஜின் நண்பர்களான குழந்தைவேலு, சிவன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடந்தது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ், சந்திரசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

ஐ.ஜி. சுதாகர் பேட்டி

சேலத்தை சேர்ந்த கனகராஜ் சென்னைக்கு செல்லும்போது குழந்தைவேலு, சிவன் ஆகியோருடன் தங்கி உள்ளார். இதனால் வழக்கில் 40-வது சாட்சியாக சேர்க்கப்பட்ட குழந்தைவேலு மற்றும் சிவனிடம் போலீசார் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை திரட்டினர். மதியம் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரை என 5 மணி நேரம் விசாரணை நடந்தது.

இதுகுறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறும்போது, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்து 4 ஆண்டுகளை கடந்து விட்டது. சில ஆதாரங்கள், தடயங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். தற்போது சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தி ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தி பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். முக்கிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கப்படும் என்றார்.

ஜித்தின்ஜாய் உள்பட 3 பேருக்கு சம்மன்

கோடநாடு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள சம்சீர் அலி, ஜித்தின்ஜாய், சதீசன், உதயகுமார், திபு, பிஜின், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி ஆகிய 8 பேர் கடந்த சில மாதங்களாக ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கு கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று அவர்களது தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த 8 பேரும், கோடநாடு சம்பவத்துக்கு பிறகு கூடலூர் வழியாக சோதனைச்சாவடியை கடந்து கேரளாவுக்கு தப்பி சென்றனர். இதனால் அதில் சம்சீர்அலி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆனால் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் ஊட்டியில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வருகிற நாட்களில் நீலகிரி அல்லது கோவையில் விசாரணை நடத்த உள்ளனர். அந்த 8 பேரிடம் விசாரணை நடத்தினால் மேலும் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா பரவலால் சம்மன் கிடைக்க பெற்றவர்கள் விசாரணைக்கு ஆஜராகுவதில் சிக்கல் உள்ளது.Next Story