ஏரல் ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு; பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்கு


ஏரல் ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு; பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Sep 2021 5:24 PM GMT (Updated: 11 Sep 2021 5:24 PM GMT)

ஏரல் ஆசிரியரை வேனில் கடத்தி ரூ.4½ லட்சம் பறித்த சம்பவத்தில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குறிப்பான்குளம் குப்பாபுரத்தை சேர்ந்தவர் சாலமோன் (வயது 52). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பராணி ஜெபமங்களம். 

கடந்த ஆண்டு அக்ேடாபர் மாதம் 23-ந் தேதி சாலமோன் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு திருச்செந்தூர் அருகே உள்ள சோலைக்குடியிருப்புக்கு சென்றார்.  இரவில் சாலமோனை உறவினரான தினேஷ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு அவசர வேலையாக சோலைக்குடியிருப்பு வந்து இருப்பதாகவும், உங்களிடம் பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு வெளியே வரும்படி அழைத்தார். இதையடுத்து சாலமோன் மட்டும் தனியாக சென்றார்.

அப்போது, அங்கு ஒரு வேன் நின்றது. வேனில் வந்த 7 நபர்கள் திடீரென்று சாலமோனை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள். இதை பார்த்த தினேஷ் அதிர்ச்சி அடைந்து, தடுக்க முயன்றார்.  பின்னர் 7 பேரும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், பேசிக் கொள்ளலாம் என கூறி, சாலமோன், தினேஷ் ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் வரச்சொன்னார்கள். அவர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.

திருச்செந்தூர் அருகே சத்யாநகர் சந்திப்பில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, சாலமோனை வேனில் கடத்திச் சென்றனர். அப்போது, தான் அவர்கள் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தன்னை அழைத்து செல்வது சாலமோனுக்கு தெரியவந்தது. மேலும், வேனில் சென்னையை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயர் (45) மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் இருந்துள்ளனர்.

வேனில் இருந்த சாலமோனிடம் உனது தம்பி தேவராஜ் ரூ.21 லட்சம் எனக்கு தர வேண்டும். உன்னை கடத்தினால் தான் பணம் கிடைக்கும் என்று சிவக்குமார் நாயர் தெரிவித்தார். தொடர்ந்து வேனை வளசரவாக்கம் போலீஸ் நிலையம் அருகில் 24-ந் தேதி நிறுத்தினர். அங்கு வைத்து அவரை விடுவிக்க ரூ.4½ லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன சாலமோன் தனது மனைவியிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். 

இதையடுத்து சென்னையில் உள்ள உறவினர் மூலம் ரூ.4½ லட்சம் கொடுக்கப்பட்டது. இதில் ரூ.3 லட்சம் சிவக்குமார் நாயரிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சாலமோன் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சாலமோன் மனைவி புஷ்பராணி ஜெபமங்களம் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். ஆனால், இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.ஐ.ஜி.யிடமும் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சாலமோன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயர், வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், அடையாளம் காட்டக்கூடிய 4 போலீசார் ஆகிய 7 பேர் மீது ஆள் கடத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story