ஆசிரமத்தில் பெண் சிறை வைக்கப்பட்ட வழக்கு: நித்யானந்தா பெண் சீடர்கள் சேலம் சிறையில் அடைப்பு


ஆசிரமத்தில் பெண் சிறை வைக்கப்பட்ட வழக்கு: நித்யானந்தா பெண் சீடர்கள் சேலம் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 11 Sep 2021 6:03 PM GMT)

ஆசிரமத்தில் பெண் சிறை வைக்கப்பட்ட வழக்கில் நித்யானந்தா பெண் சீடர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி அத்தாயி (வயது 52). நித்யானந்தாவின் தீவிர பக்தையான இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று விட்டார். அங்கு தனது பெயரை மாரூபானந்தசாமி என மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ராமசாமி தனது மனைவியை பார்க்க நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை அத்தாயியை பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி அத்தாயி, நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி என்கிற மாநித்திய ஜோதிகானந்தசாமி (33), சத்தியா என்கிற மாசர்வானந்தசாமி (41), ஆசிரமத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா (39) ஆகியோருடன் காரில் அய்யம்பாளையத்துக்கு வந்தார். அப்போது காரை முற்றுகையிட்ட உறவினர்கள் அவரை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். மேலும், நித்யானந்தாவின் பெண் சீடர்களை விரட்டியடித்தனர். 
இதுகுறித்து பெண் சீடர் அகிலா ராணி நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ராமசாமி, இவருடைய மகன் பழனிசாமி, மருமகள் பேபி ஆகியோர் தன்னை தாக்கி மானபங்கம் செய்ததாக கூறி இருந்தார். இதேபோல் தனது மனைவியை பெங்களூரு ஆசிரமத்தில் சிறைவைத்து கொடுமை படுத்தியதாகவும், ஊருக்கு வந்த அவரை மீட்க முயன்றபோது பெண் சீடர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ராமசாமி புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் பெண் சீடர் அளித்த புகாரின்பேரில் ராமசாமி, பழனிசாமி, பேபி ஆகியோர் மீது தாக்குதல், காயப்படுத்துதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமசாமி, பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சிறை வைத்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தா பெண் சீடர்கள் அகிலாராணி, சத்தியா மற்றும் ஜெயகிருஷ்ணா ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். 
பின்னர் கைதான அனைவரும் நாமக்கல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி நித்யானந்தா பெண் சீடர்கள் சேலம் பெண்கள்  சிறையிலும், மற்ற 3 பேரும் ராசிபுரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Next Story