திருச்செங்கோட்டில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது


திருச்செங்கோட்டில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 2021-09-11T23:33:31+05:30)

திருச்செங்கோட்டில் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்:
வங்கியில் கொள்ளை முயற்சி
திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அரசு பொதுவுடைமை வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவில் வங்கிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பு, டியூப் லைட்டுகளின் வயர்களை துண்டித்தனர். பின்னர் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்தனர். 
அங்கு பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்து திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அதை திறக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பலகோடி மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.
2 பேர் சிக்கினர்
இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கொடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு மாங்குட்டைபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் என்கிற சரவணகுமார் (வயது 23) மற்றும் 18 வயது சிறுவன் என்பதும், வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஒருவரிடம் செல்போன் பறித்து விட்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரித்தனர்.
செட்டில் ஆகிவிடலாம் என்ற ஆசையில்...
அப்போது அவர்கள், ஒரு முறை பெரிய தவறு செய்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்ற ஆசையில் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றதாக போலீசாரிடம் கூறினர். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சிறுவன், சரவணகுமாரை போலீசார் கைது செய்து, நீதிபதி சவுமியா மேத்யூ முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் சரவணகுமார் ராசிபுரம் கிளை சிறையிலும், 18 வயது சிறுவன் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

Next Story