மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்கு சமரச தீர்வு + "||" + cases finished

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்கு சமரச தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்கு சமரச தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
நாமக்கல்:
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், சாந்தி, சுந்தரையா, சரவணன், ஸ்ரீவித்யா, முருகன், விஜய் அழகிரி, மாலதி, தமயந்தி, ஜெயந்தி, விஜயன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாரி மற்றும் வக்கீல்கள் சதீஷ்குமார், ராகுலன், லட்சுமணசாமி, முத்து, பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள் மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது.
356 வழக்குகளுக்கு தீர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்ரோஸ் விபத்தில் இறந்ததை தொடர்ந்து அவருடைய மகள்கள் கரோலின் ரோஸ், இவாஞ்சலின் ரோஸ் ஆகியோரிடம் ரூ.15 லட்சம் கொடுத்து வழக்கு பைசல் செய்யப்பட்டது. இதில் வக்கீல்கள் வடிவேல், அமுதவள்ளி, கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) ஸ்ரீவித்யா செய்து இருந்தார்.
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 1,030 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 356 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.13 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரத்து 750 வழங்கி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.