தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,275 வழக்குகளுக்கு சமரச தீர்வு முதன்மை நீதிபதி குணசேகரன் தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,275 வழக்குகளுக்கு சமரச தீர்வு முதன்மை நீதிபதி குணசேகரன் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 2021-09-11T23:33:37+05:30)

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,275 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது என்று முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,275 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது என்று முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையை முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம், விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட சமரச தீர்வு காணக்கூடிய வழக்குகளுக்கு உரிய தீர்வு காண நீதிபதிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1,275 வழக்குகளுக்குசமரச தீர்வு
நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள 2,964 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,216 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.4 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 748-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
வங்கி வாராக்கடன்
இதேபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வாராக்கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 59 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.76 லட்சத்து 17 ஆயிரத்து 88-க்கு முடிக்கப்பட்டது. இதன்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டு முடிவடைந்த மொத்த வழக்குகள் 1,275. முடிவடைந்த வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 78 லட்சத்து 73 ஆயிரத்து 836 ஆகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story