வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பது எப்போது?


வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பது எப்போது?
x
தினத்தந்தி 11 Sept 2021 11:53 PM IST (Updated: 11 Sept 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா எப்போது திறக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பொள்ளாச்சி


ஆழியாறில் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா எப்போது திறக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


வண்ணத்துப்பூச்சி பூங்கா


ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு உள்ள டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் பொள்ளாச்சி அருகே உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் வனஉயிரின விளக்க அமையம் செயல்படாமல் புதர்மண்டி கிடந்தது.


இதை தொடர்ந்து அங்கு பூங்கா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு, கட்டுரைகள் எழுதப்பட்டன. 


இதற்கிடையில் காட்டு யானை புகுந்து, அங்கிருந்த உபகரணங்களை சேதப்படுத்தியது. இதை தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் ஆழியாறு பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக அவற்றிற்கு தனியாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.


திறப்பது எப்போது?



இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிந்தும் இன்னும் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்கா எப்போது திறக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.  


இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு பகுதிகளில் காமன்காக்கை உள்பட 5 வகையான வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வண்ணத்து பூச்சிகளுக்கு என்று தனியாக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. இதன் நுழைவு வாயில் வண்ணத்து பூச்சியின் உருவம் வைக்கப்பட்டு உள்ளது.


30 வகையான செடிகள்


மேலும் வண்ணத்து பூச்சிகளை ஈர்க்கும் வகையில் சூரியகாந்தி, லாண்டனா, காட்டாமணக்கு உள்ளிட்ட 30 வகையான செடிகள் நடப்பட்டு உள்ளன. முட்டையிட்டு குஞ்சி பொறிக்கவும், அவை உட்கார்ந்து தேனை உறிஞ்சும் வகையிலான செடிகள் அதிகமாக நடப்பட்டு உள்ளது. எலுமிச்சை, கருவேப்பிலை செடிகளில் வண்ணத்து பூச்சிகள் முட்டையிடும். 


 மேலும் வண்ணத்து பூச்சிகள் அதிகமாக பூங்காவிற்கு வரும் வகையில் அவற்றிற்கு உரிய சீதோஷ்ண நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இதை தவிர இருவாச்சி பறவை, ராஜநாகம் மற்றும் வனவிலங்குகளின் உருவங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.



 இந்த பணிகளை அனுபவம் வாய்ந்த நபர்களை கொண்டு துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ஆழியாறு அணையை பார்த்து ரசிக்கலாம். 


 இதை தவிர சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியும் உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story