சேலம் மாவட்டத்தில் இன்று 28 மையங்களில் 15,067 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்


சேலம் மாவட்டத்தில் இன்று 28 மையங்களில் 15,067 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:05 PM GMT (Updated: 11 Sep 2021 9:05 PM GMT)

சேலம் மாவட்டத்தில் இன்று 28 மையங்களில் 15 ஆயிரத்து 67 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேலம்
இன்று நீட் தேர்வு
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை சேலம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 67 பேர் எழுத உள்ளனர். 
இதற்காக சேலம் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கலைக்கல்லூரி, ஏ.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரி, வைஸ்யா மற்றும் சோனா கல்லூரிகள், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள செந்தில் பப்ளிக் ஸ்கூல், ஜெய்ராம் பப்ளிக் ஸ்கூல், மாசிநாயக்கன்பட்டி சுவாமி பள்ளி, மெய்யனூர் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு நேற்று அதிகாரிகள் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் தேர்வு அறையில் மாணவ, மாணவிகளுக்கு போடப்பட்டுள்ள இருக்கைகள், குடிநீர் வசதி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து தேர்வு மைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக தேர்வு மையத்தில் ஒரு அறையில் 12 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது, ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத முடியும். 
பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. ஆனால் தேர்வு மையத்திற்கு நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு தேர்வர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முககவசம்
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் அனுமதி சீட்டுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, 12-ம் வகுப்பு தேர்வு நுழைவு சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும். 
குறிப்பாக தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக நுழைவு சீட்டை எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது. தேர்வு எழுத வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சிறிய அளவிலான கிருமி நாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் செல்போன்களை தேர்வு மையத்துக்குள் கொண்டுவரக்கூடாது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story