சேலத்தில் போலி பணி நியமன ஆணைகள் தயாரித்து கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி


சேலத்தில் போலி பணி நியமன ஆணைகள் தயாரித்து கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 11 Sep 2021 9:07 PM GMT (Updated: 11 Sep 2021 9:07 PM GMT)

சேலத்தில் போலி பணி நியமன ஆணைகள் தயாரித்து கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

சேலம்,
மோசடி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஜங்கமசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 30), நரிப்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
படித்து முடித்துவிட்டு வேலையின்றி இருந்த எங்களுக்கு ஆத்தூர் கோர்ட்டில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் கூறினார். இதனை நம்பி அவரிடம் ஒருவருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் 3 பேருக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தோம்.
அதன்பிறகு பணி நியமன ஆணைகளை 2019-ம் ஆண்டு எங்களிடம் சம்பந்தப்பட்ட நபர் வழங்கினார். பின்னர் அந்த ஆணைகளை எடுத்துக்கொண்டு ஆத்தூர் கோர்ட்டுக்கு சென்று கொடுத்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. நீதிபதி கையெழுத்து, நீதிமன்ற முத்திரையை போலியாக தயாரித்து பணி நியமன ஆணைகளை 3 பேரிடம் அந்த நபர் கொடுத்து மோசடி செய்து உள்ளார்.
போலி நியமன ஆணை
கணினி ஆபரேட்டர் பணி நியமன ஆணை யாரும் கொடுக்கவில்லை என ஆத்தூர் கோர்ட்டில் இருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய நபரிடம் கேட்டபோது, அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார். எனவே, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கும் சென்று புகார் மனுவை அளித்தனர். இந்த மோசடி குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story