கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 12 Sept 2021 3:14 AM IST (Updated: 12 Sept 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

மழைக்கால கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெறுவதையொட்டி கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு: மழைக்கால கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெறுவதையொட்டி கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

சட்டசபை நாளை கூடுகிறது

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 13-ந் தேதி (அதாவது நாளை) தொடங்கி 24-ந் தேதி வரை நடத்துவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, மழைக்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. அதாவது வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகள் தவிர்த்து 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால், இந்த கூட்டத்தொடரை அவர் எவ்வாறு எதிர் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

விலைவாசி உயர்வு பிரச்சினை

இந்த கூட்டத்தொடரில் பெங்களூரு குடிநீர் வினியோகம் தொடர்பாக 2021-க்கான புதிய சட்ட மசோதா உள்பட 10 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதவிர கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீதும் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் முதல் நாளில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்தும் பிரச்சினையை கிளப்ப முடிவு செய்துள்ளனர். 

மைசூருவில் நடந்த கல்லூரி மாணவி கற்பழிப்பு பிரச்சினை, பெங்களூரு உள்பட மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறித்தும் சட்டசபையில் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆயத்தமாகி உள்ளனா். குறிப்பாக மைசூருவில் மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, காங்கிரஸ் கட்சியினர் தன்னை கற்பழித்து விட்டதாக கூறியதையும் எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

தக்க பதிலடி கொடுக்க...

இந்த விவகாரத்தில் காங்கிரசுக்கு, ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிக்குமா? என்பது இன்னும் தெரியவில்லை. முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றதும், தேவேகவுடாவை சந்தித்து பேசி இருந்தார். அதன்பிறகு, அரசு மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சொல்லாமல் மவுனமாக இருந்து வருகிறார். 
ஆனால் சட்டசபையில் காங்கிரஸ் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் தயாராகி வருகின்றனர். 

144 தடை உத்தரவு

10 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரை எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் காகேரி செய்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நாளை காலை 6 மணியில் இருந்து வருகிற 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு இருக்கிறார்.

Next Story