ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு


ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 4:29 PM GMT (Updated: 12 Sep 2021 4:29 PM GMT)

ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் ஆண்டிப்பட்டி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு வாசல் முன்பு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. 
இதில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, ஆர்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளர் கணேசன், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வைகை அணை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வைகை அணை முன்பாக ஆற்றங்கரையில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. அதன்பிறகு ஒவ்வொரு சிலையாக ஆற்றில் கரைக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கனகராஜ், மனோஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
சின்னமனூர்
இதேபோல் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து முன்னணி சார்பில் வீடுகளில் 42 விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று விநாயகர் சிலைகள் ஆட்டோ மற்றும் டிராக்டரில் ஏற்றி முல்லைப்பெரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. 
பின்னர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

Next Story