வீரபாண்டி அருகே கண்ணாடி பாட்டிலால் தாக்கப்பட்ட மாணவன் சாவு


வீரபாண்டி அருகே கண்ணாடி பாட்டிலால் தாக்கப்பட்ட மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Sept 2021 10:10 PM IST (Updated: 12 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே இருதரப்பினர் மோதலில் கண்ணாடி பாட்டிலால் தாக்கப்பட்ட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48) விவசாயி. கடந்த மே மாதம் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர் வனிதா என்ற நாகஜோதி, பாப்பு ஆகியோருக்கும் இடையே மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வனிதா, பாப்பு ஆகியோர் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து, முருகனை தாக்கினர். 
இதை தடுக்க வந்த அவரது மனைவி ருக்மணியையும் தாக்கினர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், வனிதா, பாப்பு ஆகியோரை தட்டிக்கேட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், வனிதா, பாப்பு தரப்பை சேர்ந்தவர்கள், முருகன் தரப்பை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகனான 5-ம் வகுப்பு மாணவன் சக்திவேலை (12) கண்ணாடி பாட்டிலால் தாக்கினர். இதில் அந்த மாணவன் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து அவன் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவனை தாக்கிய தாடிச்சேரியை சேர்ந்த முத்தையா (50), சீலையம்பட்டியை சேர்ந்த ஜெயசீலன் (49), கண்டமனூரை சேர்ந்த பழனிசாமி (51), குமரேசன் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த மாணவன் சக்திவேல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து மாணவன் தாக்கப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வனிதாவை போலீசார் நேற்று கைது செய்தனர். 

Next Story