விநாயகர் சதுர்த்தி நாளில் வைக்கப்பட்ட 248 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


விநாயகர் சதுர்த்தி நாளில் வைக்கப்பட்ட 248 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 4:57 PM GMT (Updated: 12 Sep 2021 5:02 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி நாளில் வைக்கப்பட்ட 248 சிலைகள் நேற்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் வீடுகள் மற்றும் வீட்டின் வெளியே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இந்து அமைப்புகளின் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி நாள் அன்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. மேலும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கரைக்கப்பட்டன.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகள் 3-வது நாளில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி 3-வது நாளான நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 248 விநாயகர் சிலைகள் பல்வேறு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

தர்மபுரி வடிவேல் கவுண்டர் தெருவில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு நிர்வாகிகள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பின்னர் அந்த சிலை அக்ரஹாரத்தில் உள்ள கோவில் கிணற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story