தனியார் நிறுவன உரிமையாளரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


தனியார் நிறுவன உரிமையாளரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 12 Sept 2021 10:50 PM IST (Updated: 12 Sept 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வேலை பார்த்த தனியார் நிறுவன உரிமையாளரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சயான், விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் கோடநாடு வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியது. தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் தேவைபட்டால் மற்றவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி முழு உண்மையை வெளியே கொண்டுவர 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர் வழக்கு தொடர்பாக முக்கிய நபர்களிடம், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் விசாரணை நடத்தினார். சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்கு தனிப்படையினர் சென்று ரகசிய விசாரணை நடத்தி உண்மை தன்மையை அறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான திருமூர்த்தியிடம், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணிபுரிந்த கனகராஜ், அந்த பணியில் இல்லாதபோது ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். இதனால் அந்த நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு அவர் எத்தனை மாதங்கள் பணிபுரிந்தார், அவரை தேடி யாரும் வந்தார்களா, அவருடன் நெருங்கி பழகியவர்கள் யார் என்று போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து வருகிற நாட்களில் ஜாமீனில் உள்ள மற்ற 8 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story