திருப்பூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறித்துச்சென்ற வாலிபர் கைது


திருப்பூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறித்துச்சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2021 11:14 PM IST (Updated: 12 Sept 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11லட்சம் பறித்துச்சென்ற வாலிபர் கைது

அனுப்பர்பாளையம், 
திருப்பூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறித்துச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பணம் பறிப்பு
திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த முத்தணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45). கடந்த 9-ந்தேதி ஒரு இடத்தை கிரையம் செய்வதற்காக ராமநாதன் தனது மனைவி தேன்மொழியுடன் (36) மோட்டார்சைக்கிளில் நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். இதற்காக ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை அவர்கள் கொண்டு சென்றனர். 
அங்கு இடத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் சின்ன மொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த கேத்தம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் திடீரென தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டான்.
வாகன சோதனை 
அனுப்பர்பாளையம் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். இதையடுத்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த், அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை நெருப்பெரிச்சல் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது 
இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்த மாரசாமி என்பவரின் மகன் அருண்குமார் (23) என்பதும், தற்போது திருப்பூர் பூலுவப்பட்டியை அடுத்த தோட்டத்துப்பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் கடந்த 9-ந்தேதி ராமநாதன்-தேன்மொழி தம்பதியிடம் ரூ.11 லட்சத்து 12 ஆயிரம் பணத்தை பறித்து சென்றது இவர்தான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அருண்குமாரை கைது செய்த போலீசார், திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் விலை உயர்ந்த திருட்டு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தம்பதியிடம் பறித்த பணத்தில் ரூ.1 லட்சத்திற்கும் மேலாக நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து ஜாலியாக இருந்ததாக அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது ஏற்கனவே செல்போன் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. திருப்பூரில் தம்பதியிடம் ரூ.11 லட்சத்தை பறித்து சென்ற வாலிபரை 4 நாட்களில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.

Next Story