தூத்துக்குடியில் 30 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
தூத்துக்குடியில் 30 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 30 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலை விஜர்சனம் நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யவும், அதனை தனி நபராக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுமார் ஒரு அடி உயர விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் தபசு மண்டபம் அருகே ஒரு வீட்டின் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கரைப்பு
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 30 சிலைகள் மோட்டார் சைக்கிள் மூலம் சங்குமுக கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார், செயலாளர் ராகவேந்திரா, சிவலிங்கம், நாராயணராஜ், சரவணகுமார், மண்டல நிர்வாகிகள் சிபு, பலவேசம், நெல்லை பொறுப்பாளர்கள் பிரம்மநாயகம், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று சிவபாரத இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் விநாயகர் சிலைகள், தூத்துக்குடி கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலையில் விநாயகர் சிலை விஜர்சனம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி செல்வசுந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 21 விநாயகர் சிலைகளை மோட்டார் சைக்கிள்களில் வைத்து கடற்கரைக்கு கொண்டு சென்று கரைத்தனர். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் வீடுகளில் வைத்து இந்து மக்கள் கட்சியினரும், இந்து முன்னணி கட்சியினரும் விநாயகர் சதுர்த்தி வழிபட்டனர்.
இந்த விநாயகர் சிலைகளை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில், தாசில்தார் பேச்சிமுத்து ஆகியோர் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத கோதண்டராமர் ஆலயத்தில் உள்ள ராமர் தீர்த்த்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் தனிநபர்கள் கொண்டு வரப்பட்டு அந்த சிலைகள் கரைக்கப்பட்டன.
இதில் ஆத்திகுளம், ராமலிங்கபுரம், தலையால்நடந்தான்குளம், அய்யனார்ஊத்து, வடக்கு இலந்தைகுளம், குமாரகிரி, தெற்கு இலந்தைகுளம் உள்பட 18 விநாயகர் சிலைகள் அந்த நிர்வாகிகள் தனித்தனியாக வந்து ராமர் தீர்த்தத்தில் சிலைகளை கரைத்து சென்றனர்.
மேலும் ஆத்திகுளம் கிராமத்தில் பொது இடத்தில் சிலை வைக்கப்பட்டதின் காரணமாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கயத்தாறு போலீசில் புகார் செய்ததன் பேரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் வருவாய் ஆய்வாளர் நேசமணி தலைமையில் அந்த விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
திருச்செந்தூர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு வீடுகளில் 1 முதல் 1½ அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தட்டார்மடம், சேரகுளம், மெஞ்ஞானபுரம், உடையார்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிபாடு நடத்திய 63 விநாயகர் சிலைகள் நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவில் கடலில் கரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் கசமுத்து, மாவட்ட செயலாளர் பிரபாகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டும்பெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய பொது செயலாளர் ராஜேந்திரன், நகர பொது செயலாளர் முத்துராஜ், நகர பொருளாளர் மணி, நகர துணை தலைவர் மாயாண்டி, சாத்தான்குளம் ஒன்றிய பொது செயலாளர் சுந்தரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், சுமதி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாத வகையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story