வேலூரில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைப்பு
வேலூரில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.
வேலூர்
வேலூரில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னர் சிலைகளை போலீசார் அனுமதி அளிக்கும் நாள் அல்லது 3-வது நாளில் ஊர்வலமாக கொண்டு சென்று அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும், அதனை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழக்கமாக காணப்படும் கொண்டாட்டம், உற்சாகம் காணப்படவில்லை. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
நீர்நிலைகளில் கரைப்பு
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. வேலூர் நகர பொதுமக்கள் விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் சென்று சதுப்பேரி ஏரியில் கரைத்தனர்.
சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேள, தாளத்துடன் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து பழனி ஆண்டவர் கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் நீர்நிலைகளில் கரைப்பதற்கு எடுத்துச் சென்றனர்.
விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதையொட்டி சதுப்பேரி ஏரிப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏரியின் கரையில் வரிசையாக சிலைகளை கரைத்து விட்டு உடனடியாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.
திருப்பி அனுப்பினார்கள்
வேலூர் கோட்டை அகழியில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் சிலர் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அகழியில் கரைக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.
Related Tags :
Next Story