கரூரில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 12 Sep 2021 6:44 PM GMT (Updated: 12 Sep 2021 6:44 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாம்களில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர்,
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தடுப்பூசி டோஸ்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முகாம்களில் தடுப்பூசி போட நேற்று காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தப்பட்டன. பொதுமக்கள் பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, காந்தியார் மண்டபம், கக்கன் காலனி சமுதாய கூடம், புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் மண்மங்கலம், அய்யம் பாளையம், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்பட அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் அருகே சேமங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  கொரோனா தடுப்பூசியை போட்டனர். 
அதேபோல் தவுட்டுபாளையம், வேட்டமங்கலம், ஆலமரத்துமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் துணை சுகாதார நிலையம், காகிதபுரம், காந்தி மண்டபம், முத்தனூர் அரசு பள்ளி, குந்தாணி பாளையம் அரசு பள்ளி, அண்ணாநகர் அரசு பள்ளி, அதியமான்கோட்டை அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஆய்வு
கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருமான வீர ராகவ ராவ், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி அரசு தொடக்கப்பள்ளி, மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈக்விடாஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுடைய தகவல்களை இணையத்தில் பதிவேற்றும் செய்யும் பணிகளில் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்னர்.
61 ஆயிரத்து 724 பேருக்கு தடுப்பூசி 
இதுகுறித்து கண்காணிப்பு அலுவலர் வீர ராகவ ராவ் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 245 ஆகும். இதில் 11-ந் தேதி வரை முதல் தவணை தடுப்பூசியினை 4 லட்சத்து 9 ஆயிரத்து 300 பேரும், 2-வது தவணை தடுப்பூசியினை 1 லட்சத்து 13 ஆயிரத்து 742 பேர் என மொத்தம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 42 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இன்று (நேற்று) நடைபெற்ற முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை என அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். ஆனால் இந்த முகாம்களில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில்,  முதல் தவணை தடுப்பூசியை 41 ஆயிரத்து 825 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 19 ஆயிரத்து 899 பேரும் செலுத்திக்கொண்டனர். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வின்போது பொது சுகாதார இணை இயக்குனர் ஞானக்கன் பிரேம் நிவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தாசில்தார் .சக்திவேல், நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story