கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்


கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 13 Sept 2021 1:12 AM IST (Updated: 13 Sept 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் கிளை சிறைச்சாலை ரோட்டில் வினை தீர்த்தவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 சிறிய சந்தன மரங்கள் இருந்தன. இதில் ஒரு மரத்தை நேற்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் வெட்டி, அதில் ஒரு பகுதியை கடத்தி சென்று விட்டனர்.
சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இதை நேற்று காலை தனது அலுவலகத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் பார்த்தார். அப்போது மரக்கிளைகள் வெட்டப்பட்டு கிடந்தது. பின்னர் இது பற்றி அவர் வனத்துறைக்கும், கடலூர் புதுநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

விசாரணை

அதன்பேரில் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வன காப்பாளர் ஆதவன், புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், வருவாய் ஆய்வாளர் உதயசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மர்ம நபர்கள் விட்டு சென்ற சந்தன மரத்தின் அடிப்பகுதியை தோண்டி வெளியே எடுத்தனர். ஏற்கனவே மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மேல் பகுதி கிளைகளையும் எடுத்து எடை போட்டனர். மொத்தம் 8 கிலோவுக்கு மேல் இருந்தது. இதையடுத்து அந்த சந்தன மரக்கட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வலைவீச்சு

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி துண்டுகளை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபற்றி வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது கூறுகையில், சந்தன மரத்தை வெட்டி, அதில் உள்ள சிறிய துண்டு பகுதியை மர்ம நபர்கள் எடுத்துச்சென்று விட்டனர். ஆனால் அந்த மரம் விளைச்சல் குறைவு என்பதால், அதில் சந்தனம் இருக்காது. இருப்பினும் அதன் மதிப்பு பற்றி ஆராய்ந்து வருகிறோம். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.
இருப்பினும் இசைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், கோவில் என ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story