முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் கொரோனா தொற்று பரவும் அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை
முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொது இடங்களில் சுற்றுகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-
கொரோனா தொற்று நோய் குறைந்து வருவதாக பொதுமக்கள் இயல்பாக இருக்கிறார்கள். இது தவறான செயல் ஆகும். பொதுமக்கள் மத்தியில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படுகிறது.
பாதிப்பு அதிகரிக்கும்
கொரோனாவை முற்றிலும் விரட்ட வேண்டும் என்றால் மக்கள் தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 50 சதவீத பொதுமக்கள் முககவசம் அணியாமல் செல்கிறார்கள். கொரோனா நம்மை விட்டு சென்று விட்டது என்று யாரும் எண்ண வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story