ஒரே குடும்பத்தில் டாக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா
நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தில் டாக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தில் டாக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டருக்கு தொற்று
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு 30-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் இதுவரை 17 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் நேசமணி நகர் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு நேற்று கொரோனா ெதாற்று இருப்பது உறுதியானது. அதாவது தொற்று பாதித்தவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் என்பதும், அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
குடும்பத்தினருக்கும்...
இதனை தொடர்ந்து டாக்டரின் மனைவி, மகன் மற்றும் தாயாருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர், அவரது மனைவி, மகன் மற்றும் தாயார் ஆகிய 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தொற்று கண்டறியப்பட்ட டாக்டரின் வீடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலம் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
மேலும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த சிலரையும், சுகாதார அதிகாரிகள் வீட்டு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஒரே குடும்பத்தில் டாக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story