திருச்சியில் நீட் தேர்வை 8,754 மாணவ-மாணவிகள் எழுதினர்


திருச்சியில் நீட் தேர்வை 8,754 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 12 Sep 2021 8:59 PM GMT (Updated: 12 Sep 2021 8:59 PM GMT)

திருச்சியில் 21 மையங்களில் நடந்த நீட் தேர்வை 8,754 மாணவ-மாணவிகள் எழுதினர்.

திருச்சி
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 21 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 9 ஆயிரத்து 105 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு நேற்று காலையிலேயே தங்களது பெற்றோருடன் வந்து குவிந்தனர்.
கடும் கட்டுப்பாடுகள்
தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் சங்கிலி, மூக்குத்தி, காதணி, வளையல்கள் அணிந்து வந்த மாணவிகள் அதனை தங்களது பெற்றோரிடம் கழற்றி கொடுத்தனர். மேலும் தலையில் மாட்டியிருந்த பெரிய அளவிலான ஹேர்பேண்ட்டையும் அகற்றினர். பகல் 11.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
 நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் மைய ஊழியர்கள் நின்று மாணவ-மாணவிகளை கடும் சோதனை செய்து அனுமதித்தனர். ஆடை உள்ளிட்டவைகளை கண்காணித்தும், ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை சரிபார்த்த பின்னர் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு அறையில் 12 பேர் மட்டும்
 கொரோனா பரவலை தடுக்க இந்த ஆண்டு ஒரு அறையில் 12 பேர் மட்டுமே தேர்வு எழுதும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்திலேயே வெள்ளைநிற எண் 95 முககவசம் மற்றும் பேனா இலவசமாக வழங்கப்பட்டன.
 திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தின் வளாகத்தில் பெற்றோர்கள் பலர் கும்பலாக காத்திருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டனர். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர் வாழ்த்தியும், முத்தமிட்டும் அனுப்பி வைத்தனர்.
351 பேர் தேர்வு எழுத  வரவில்லை
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மாவட்டத்தில் 21 மையங்களில் மொத்தம் 8,754 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 351 பேர் தேர்வுக்கு வரவில்லை.

Next Story