சிக்பள்ளாப்பூர் அருகே லாரி-ஜீப் மோதல்; 8 பேர் உடல் நசுங்கி சாவு


சிக்பள்ளாப்பூர் அருகே லாரி-ஜீப் மோதல்; 8 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 13 Sept 2021 2:40 AM IST (Updated: 13 Sept 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் அருகே லாரியும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உடல்நசுங்கி இறந்த சம்பவம் நடந்து உள்ளது.

சிக்பள்ளாப்பூர்:

8 பேர் சாவு

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கெஞ்சரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மதநாயக்கனஹள்ளி கேட் வழியாக செல்லும் ராயல்பாடு-சிந்தாமணி சாலையில் ஒரு ஜீப் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், ஜீப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் கெஞ்சரஹள்ளி போலீசார் அங்கு சென்று ஜீப்புக்குள் இருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஜீப்பின் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 6 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உயிருக்கு போராடியவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

  இதற்கிடையே விபத்தில் பலியான 8 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜீப் ராயல்பாடுவில் இருந்து சிந்தாமணி நோக்கி வந்தது தெரிந்தது.

  மேலும் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்த ரமேஷ், முனிரத்னம்மா, நாராயணசாமி, நிகில், வெங்கடலட்சுமி என்பது தெரிந்தது. மீதம் உள்ள 3 பேரின் பெயர்களும், விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரின் பெயர்களும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து கெஞ்சரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story