மாவட்ட செய்திகள்

தீக்குளித்து இறந்தவரின் உடல் ஏற்றி வரப்பட்ட ஆம்புலன்சை நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் + "||" + Cattle workers protest by stopping an ambulance carrying the body of a fire victim

தீக்குளித்து இறந்தவரின் உடல் ஏற்றி வரப்பட்ட ஆம்புலன்சை நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

தீக்குளித்து இறந்தவரின் உடல் ஏற்றி வரப்பட்ட ஆம்புலன்சை நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
தீக்குளித்து இறந்த மாட்டுவண்டி தொழிலாளியின் உடல் ஏற்றி வரப்பட்ட ஆம்புலன்சை நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
தா.பழூர்:

தீக்குளித்து சாவு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். மாட்டு வண்டிதொழிலாளி. இந்நிலையில் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 1-ந் தேதி ஜெயங்கொண்டத்தில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அன்று மாலை வீட்டில் இருந்த பாஸ்கர், மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கக்கோரியும், போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட மாட்டு வண்டிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக்கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
நேற்று காலை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடல் சொந்த ஊரான உதயநத்தம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இதையொட்டி தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் உதயநத்தம் மற்றும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மதியம் சுமார் 2 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் அணைக்கரை வழியாக உதயநத்தம் கிராமத்திற்கு பாஸ்கரின் உடல் எடுத்து வரப்பட்டபோது, அணைக்கரை வடவார் தலைப்பு மற்றும் கண்டியங்கொல்லை கிராமத்துக்கு இடையில் பாஸ்கரின் உடல் ஏற்றிவரப்பட்ட ஆம்புலன்சை மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
மறியல் போராட்டம்
அப்போது, மாட்டுவண்டி தொழிலாளர்களுக்காக உயிரிழந்த பாஸ்கர் குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளியான பாஸ்கரின் மனைவிக்கு அவரது தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும், பாஸ்கரின் மகன் மற்றும் மகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும், தா.பழூர் பகுதியில் உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரியை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் உள்ளிட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து, பாஸ்கரின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை பெற்றுத்தருவதாக தாசில்தார் எழுத்து மூலமாக உத்தரவாதம் அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அணைக்கரை-சிலால் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் பாஸ்கரின் உடல் அவரது சொந்த ஊரான உதயநத்தம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் பாஸ்கர் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கிற்காக நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பாஸ்கரின் உடல் அந்த கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.