திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் எதிரே தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி


திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் எதிரே தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Sept 2021 5:55 AM IST (Updated: 13 Sept 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் எதிரே தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் கால்வாய் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் எதிரே சன்னதி தெருவில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் குழந்தைகள், சிறியவர்கள், வயதானவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கோவிலின் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் கோவில் வளாகம் எதிரே தேங்கி சாக்கடையாக காட்சியளிக்கிறது.

மேலும் மழை காலங்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக சன்னதி தெருவில் வசிப்பவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் என அனைவருமே அவதியடைகின்றனர்.

இதன் மூலம் மலேரியா, டெங்கு கொசுக்கள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல முறை புகார் அனுப்பியும் இதுநாள் வரையிலும் கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களாகவே கோவில் வளாகம் முன்பு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கோவில் முன்பு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளனர். எனவே திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் எதிரே தேங்கியிருக்கும் கழிவு நீரை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அகற்றி கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story