திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்தது: நீட் தேர்வை 2 ஆயிரத்து 208 மாணவ, மாணவிகள் எழுதினர்


திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்தது: நீட் தேர்வை 2 ஆயிரத்து 208 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 13 Sep 2021 12:27 AM GMT (Updated: 13 Sep 2021 12:27 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று நடந்த மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 2 ஆயிரத்து 208 மாணவ, மாணவிகள் எழுதினர்.

திருவள்ளூர், 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நடைபெற்ற தேர்வில் மாணவிகள் 70 ஆயிரம் பேரும், மாணவர்கள் 40 ஆயிரம் பேர் உள்பட 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுத சென்னை கொரட்டூரில் 480 பேர், சென்னை அம்பத்தூரில் 480, கிழக்கு முகப்பேரில் 420 பேர், திருவள்ளூரில் உள்ள 3 பள்ளிகளில் 300, 420, 175 என 2 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடந்த நிலையில், 2 ஆயிரத்து 208 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர்.

திருவள்ளூரில் உள்ள 3 தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் 2 மணிக்கு முன்னரே வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து தேர்வு எழுத பள்ளி வளாகத்திற்குள் செல்ல தயாராக இருந்த மாணவ, மாணவிகளுக்கு அதிகாரிகள் கைகளில் கிருமி நாசினி தெளித்து கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் முழு பாதுகாப்பு உடை அணிந்த அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர்.

பின்னர் முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மாணவ, மாணவிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

அதேபோல் தேர்வு மையங்களின் முன்பு நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவும் விதமாக கூட்டம் கூட்டமாக கூடி இருந்தனர். திருவள்ளூரில் உள்ள 3 நீட் தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story