நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்பு; மீனவர்கள் வேலை நிறுத்தம்
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக கூறி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 40 படகுகளில் சென்று கடலில் மீன் பிடித்து வருவது வழக்கம். இங்கு அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு அவர்கள் இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் தூண்டில் வளைவு அமைத்து தந்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மீன்வளத்துறைக்கு கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட சில மீனவ பகுதிகளுக்கு தூண்டில் வளைவு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நெம்மேலிகுப்பம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 2 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு, 20 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் முன்னோக்கி வந்துவிட்டதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் ஆங்காங்கு ஏற்பட்ட மணல் திட்டுகளால் தொங்கி கொண்டிருக்கின்றன. ராட்சத அலைகள் தாக்குவதால் படகுகள் ஒன்றோடு, ஒன்று மோதி சேதம் அடைவதாகவும் மீனவர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 படகுகள் நேற்று அதிகாலை நேரத்தில் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டன. மாற்று படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அந்த படகுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடல் சீற்றத்தால் 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் படகு, மீன் பிடி சாதனைங்களை வைக்க இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடல் கரைப்பகுதியை நோக்கி முன்னோக்கி வந்துவிட்டதால் 12-க்கும் மேற்பட்ட படகுகளை கடற்கரையில் உள்ள சிமெண்டு சாலையில் வைத்துள்ளனர்.
கடற்கரை ஓரத்தில் உள்ள சிமெண்டுசாலையின் ஒரு பகுதி ராட்சத அலை தாக்கியதில் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் தங்கள் பகுதியில் இனி கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தூண்டில் வளைவு அமைக்க கோரி நேற்று முதல் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடல் அரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத்துறை நிர்வாகம் நெம்மேலி குப்பம் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் அல்லது கருங்கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அதுவரை தாங்கள் கடலுக்கு செல்லப்போவதில்லை என்று தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நெம்மேலி குப்பம் கடற்கரை பகுதிக்கு மீன் வாங்க வந்த அசைவ பிரியர்கள் நேற்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை காண முடிந்தது.
Related Tags :
Next Story