பன்முக திறமை கொண்ட பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் மத்திய மந்திரி தகவல்


பன்முக திறமை கொண்ட பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2021 2:15 PM IST (Updated: 13 Sept 2021 2:15 PM IST)
t-max-icont-min-icon

பன்முக திறமை கொண்ட பாரதியாருக்கு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் சென்னையில் கூறினார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி பாரதியார் சென்ற இடங்களில் 100 நாட்கள் விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் கலந்துகொண்டு பாரதியார் இல்லத்தை பார்வையிட்டார். பின்னர் பாரதியார் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரதியார் எழுதிய பாடல்களில் சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிவிட்டு பாடலை பாடினார்.

பன்முக திறமை கொண்டவர்

விழாவில் மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் பேசியதாவது:-

பாரதியார் என்ற சொல்லே கலாசாரத்தை வளர்க்கக்கூடியதாகும். தமிழகம் மட்டுமல்லாது கொல்கத்தா, காசி உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

அதுதவிர வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். அவர் பன்முக திறமை கொண்டவர். பாரதியாரின் புகழை மேலும் பரப்புவதற்காக தமிழகம் முழுவதும் விழா நடப்பது பெருமையாக உள்ளது.

அருங்காட்சியகம்

பாரதியாரின் புகழை மேலும் பரப்புவதற்காக தமிழக அரசு அல்லது தனியார் அமைப்புகள், பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் மத்திய அரசு அதை நிறைவேற்ற தயாராக உள்ளது.

பாரதியார் எழுதிய புத்தகங்களை மொழிபெயர்த்து தென் மாநிலங்கள் என்று இல்லாமல் ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பாரதியார் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமூகத்தை மேம்படுத்துவம் வகையில் உள்ளன. குறிப்பாக பெண்களுக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் குரல் கொடுத்தவர்.

இந்திய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பாரதியாரின் கொள்கைகள் கொண்டுசெல்லப்படும். அரசு மற்றும் தனியார் நூலகங்களில் பாரதியார் நூல்களை வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story