கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி  உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Sep 2021 11:55 AM GMT (Updated: 13 Sep 2021 11:55 AM GMT)

நாலாட்டின்புதூரிர் பறையர் சமுதாய மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
நாலாட்டின்புதூரில் பறையர் சமுதாய மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரை சேர்ந்த கிராமமக்கள் அயோத்தி தாசர் பறையர் சமுதாய நல சங்க தலைவர் எ.கந்தசாமி தலைமையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பறையர் சமுதாய நிலம்
கோவில்பட்டி தாலுகா நாலாட்டின்புதூர் எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த ஆதிதிராவிட பறையர் சமுதாய பொறுப்பாளர் மாடசாமி, கிருஷ்ணன், மாணிக்கம், பேயாண்டி, சுப்பன், சங்கன் ஆகிய 6 பேர் கடந்த 1945-ம் ஆண்டு சங்கரபாண்டியன் என்பவரிடமிருந்து 50 சென்ட் நிலம் வாங்கினர். இந்த நிலம் தற்போது வரை பறையர் சமுதாய மக்களின் பயன்பாட்டில் உள்ளது. அப்போது கிரையம் பெற்ற சமுதாய பொறுப் பாளர்கள் வெவ்வெறு காலக் கட்டங்களில் இறந்து விட்டனர். அவர்கள் யார் பெயருக்கும் உயிலோ அல்லது தானமோ எழுதி வைக்கவில்லை.
இந்நிலையில் கோவில்பட்டி மண்டல துணை தாசில்தார் உயில், தானம், கிரையம் இல்லை என்று கூறி பட்டா வழங்க மறுத்து வருகிறார். அவர் கேட்டுக் கொண்டபடி 1945-ம் ஆண்டு கிரையம் பெற்ற பத்திர நகல், 2009 -ல் இருந்து 2021-ம் ஆண்டு வரை உள்ள காலத்துக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கணினி பட்டா நகல் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பறையர் சமுதாயத்தை பதிவு பெற்ற சங்கமாக பதிவு செய்து அயோத்தி தாசர் பறையர் சமுதாய நலச்சங்கம் என்ற பதிவு சான்று, 1967 முதல் 1974-ம் ஆண்டு வரை சார்பதிவாளர் வழங்கிய வில்லங்கச் சான்று, எஸ்.பி.எம். தெரு பறையர் சமுதாய மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட தற்போதைய பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகியவையும் சமர்பிக்கப் பட்டுள்ளன.
பட்டா வழங்க கோரிக்கை
ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. பறையர் சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பட்டா மாறுதல் வேண்டி விண்ணப் பித்த நிலையில், தாங்கள் பரிசீலித்து, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story