மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
ராணிப்பேட்டை மவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் மீது, அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் மீது, அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மரியாதையுடன் நடத்த வேண்டும்
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்பதால் நல்ல வளர்ச்சி பாதை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். இதனை பூர்த்தி செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளும் தங்கள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள், தமிழக முதல்வர் அறிவிக்கும் புதிய திட்டங்களை தகுதியுள்ள பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏதேனும் சந்தேகங்கள், பிரச்சினைகளை சம்பந்தமாக அதிகாரிகளை அணுகும்போது அவர்களை மரியாதையுடன் நடத்திட வேண்டும். அவர்களுக்கு முறையான உதவி, பதில் தெரிவிக்க வேண்டும். முடிந்த வரையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
அடிப்படை பிரச்சினைகள்
மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் இவற்றின் மீது தனிக்கவனம் செலுத்திட வேண்டும். பத்திரிக்கைகளில் வெளிவரும் புகார்கள் குறித்த செய்திகள் மீது தனிக்கவனம் செலுத்தி அவற்றை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து திறம்பட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பணிகளில் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story