17 நாட்களுக்கு பிறகு பிரார்த்தனை நடத்த அனுமதி


17 நாட்களுக்கு பிறகு பிரார்த்தனை நடத்த அனுமதி
x
தினத்தந்தி 13 Sept 2021 10:39 PM IST (Updated: 13 Sept 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்ததால் கூட்டம் அலைமோதியது.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு  பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்ததால் கூட்டம் அலைமோதியது.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலய ஆண்டு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. 
கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன.
17 நாட்களுக்கு பிறகு அனுமதி
இந்த நிலையில் ஆண்டு பெருவிழா முடிவடைந்ததையொட்டி 17 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. 
இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த 10-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story