பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் சிதறி பிளஸ்-2 மாணவிகள் காயம்
4 வழிச்சாலை பணிக்காக கட்டிடத்தை இடித்த போது கண்டமங்கலம் அரசு பள்ளி ஆய்வக கட்டிடத்தில் ஆசிட் சிதறி பிளஸ்-2 மாணவிகள் காயமடைந்தனர்.
கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9 முதல் 12-வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விழுப்புரம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சாலையோர நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சாலையோரத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிபாடுகளில் சிக்கியது. அதன்படி அங்குள்ள ஆய்வகம் உள்ளிட்ட கட்டிடங்கள் நேற்று காலை இடிக்கப்பட்டன.
இதையொட்டி ஆய்வகத்தில் இருந்த பொருட்கள் வேறு கட்டிடத்திற்கு மாணவிகள் மாற்றி வைத்துக் கொண்டு இருந்தனர். அதேநேரத்தில் எந்திரம் மூலம் ஆய்வக கட்டிடம் இடிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
ஆசிட் சிதறியதில் காயம்
இதனால் ஏற்பட்ட அதிர்வில் அங்கிருந்த ரசாயன கண்ணாடி குடுவைகள் சரிந்து விழுந்தன. இதில் ஒரு குடுவை உடைந்து அதில் இருந்த சல்பியூரிக் ஆசிட் தரையில் பரவி புகை மண்டலமானது.
இதில் பிளஸ்-2 மாணவிகளான பள்ளிப்புதுப்பட்டு பாமா, மிட்டா மண்டகப்பட்டு ஜனனி, ஆதிஷா, நித்யா ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் மாணவி பாமாவுக்கு கண் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தெரியவந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவிகளை அரியூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கண்ணில் காயமடைந்த மாணவி, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கலெக்டர் நேரில் விசாரணை
ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் மாணவிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு விசாரித்தார். விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பள்ளி ஆய்வக கட்டிடம் இடிக்கப்படும் போது குடுவை உடைந்து ஆசிட் சிதறியதில் 4 மாணவிகள் காயமடைந்த சம்பவம் கண்டமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story