மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு + "||" + Sudden death of Plus-2 student at school

பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு

பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு
விக்கிரவாண்டி அருகே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர் திடீரென இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 42). விவசாயி. இவரது மகன் தினேஷ்(17). இவர், வா.பகண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
வழக்கம்போல் தினேஷ் நேற்று காலையில் பூந்தோட்டத்தில் பூப்பறித்து விட்டு பள்ளிக்கு சென்றார். 
வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது காலை 9.45 மணியளவில் தினேசிற்கு திடீரென அதிகளவு வியர்வை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார். 

சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, சக மாணவர்கள், இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் கூறினர். உடனே தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஓடிவந்து, மாணவர் தினேசை மீட்டு சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரணம் என்ன?

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, அதன் அறிக்கை வந்தால்தான் மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து விநாயகமூர்த்தி விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.