மொபட் மீது வேன் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி-டிரைவர் கைது


மொபட் மீது வேன் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி-டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2021 11:53 PM IST (Updated: 13 Sept 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர்:
என்ஜினீயரிங் மாணவர்
மோகனூர் அருகே உள்ள லத்துவாடி ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு தீபக் (வயது 20), தாமோதரன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் தீபக் நாமக்கல் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபக் நேற்று முன்தினம் மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க நாமக்கல் நோக்கி சென்றார். பின்னர் அவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி எதிரே இருக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தார். பின்னர் தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். 
பலி
அப்போது எதிரே வேகமாக வந்த வேன், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீபக் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.  இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தை ஏற்படுத்தியதாக வேன் டிரைவரான நல்லையகவுண்டன்புதூரை சேர்ந்த சுதாகர் (43) என்பவரை கைது செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story