ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது
பணகுடி அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள் (வயது 60), விவசாயி. இவர் நேற்று மதியம் உறவினரை காரில் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார். அங்கு அவரை இறக்கி விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பணகுடி அருகே காவல்கிணறு மேம்பாலத்தில் வந்தபோது கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
அப்போது மேம்பாலத்தில் சாலைப்பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர் ஒருவர் அதை பார்த்தார். உடனே அவர், இதுபற்றி நாராயண பெருமாளிடம் கூறினார். அவர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார். அவர் இறங்கிச் சென்ற சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகத்தினால் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story