ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்: ஜனாதிபதி, மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்


ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்: ஜனாதிபதி, மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:43 PM GMT (Updated: 13 Sep 2021 8:43 PM GMT)

ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் எளிமையான அரசியல்வாதி என புகழஞ்சலி சூட்டியுள்ளனர்.

பெங்களுரு:

பிரதமர் மோடி

  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலங்களவை எம்.பி. ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. அவரது ஆத்மா அமைதி பெறட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  அகில இந்தியா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், "ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு. காங்கிரஸ் கட்சியில் எங்களை போன்றவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பசவராஜ் பொம்மை

  பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில், "நீங்கள் எங்களது பிரார்த்தனையிலும், இதயத்திலும் உள்ளீர்கள். ஆஸ்கர் பெர்னாண்டஸ் காங்கிரசின் விசுவாசமான, நம்பகமான தலைவர்களில் ஒருவராக விளங்கினார். நாங்கள் அனைவரும் உங்களை தவற விடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ஆஸ்கர் பெர்னாண்டஸ் எளிமையான தலைவர். அவர் மத்திய மந்திரியாக, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தபோது முக்கியமான சேவைகளை ஆற்றினார். இறைவன் அவரது ஆத்மாவுக்கு அமைதி வழங்கட்டும். அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பா-சித்தராமையா

  முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், "முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்த செய்தி கேட்டு தீவிர துக்கம் அடைந்தேன். தேசிய அளவில் தன்னை நிலை நிறுத்தி கொண்டவர். எளிமையான அரசியல்வாதி. அவரது இறப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை வழங்குமாறு இறைவனிடம் கேட்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் காங்கிரசின் விசுவாசமான நிர்வாகி.

டி.கே.சிவக்குமார்

  நான் காங்கிரசில் சேருவதற்கு முன்பு அவரை தான் முதலில் சந்தித்து பேசினேன். அவர் என்னை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர் மிக எளிமையான அரசியல்வாதி. அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும். குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஆஸ்கர் பெர்னாண்டஸ் இறந்தார் என்ற செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். அவர் பல்வேறு நிலைகளில் கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணி மற்றும் தொலைநோக்கு பார்வை எப்போதும் நினைவு கூறப்படும். எளிமையான அரசியல்வாதி" என்று தெரிவித்துள்ளார்.

தேவேகவுடா

  ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தனது டுவிட்டரில், "முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது ஆத்மாவுக்கு இறைவன் அமைதி வழங்கட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தி இறைவன் வழங்கட்டும் என்று வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த அரசியல்வாதி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக பல்வேறு நல்ல பணிகளை செய்தார். காங்கிரசின் விசுவாசமான தலைவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story