2½ மாத குழந்தை திடீர் சாவு


2½ மாத குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 14 Sept 2021 2:14 AM IST (Updated: 14 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 2½ மாத குழந்தை திடீரென மரணம் அடைந்தது. தடுப்பூசி போட்டதால் இறந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 2½ மாத குழந்தை திடீரென மரணம் அடைந்தது. தடுப்பூசி போட்டதால் இறந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 
குழந்தை இறந்தது
நாகர்கோவில் ஒழுகினசேரி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 32). இவருடைய மனைவி ஆறுமுககனி (21). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு. இந்த நிலையில் ஆறுமுககனிக்கு கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 
அந்த குழந்தைக்கு கடந்த 8-ந் தேதி தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தை கடந்த 11-ந் தேதி காலையில் திடீரென இறந்துவிட்டது. குழந்தையின் மூக்கு வழியாக ரத்தம் வழிந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் வீட்டின் முன்பு உறவினர்கள் திரண்டனர்.
பெற்றோர் புகார்
இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ‘‘நாங்கள் ஓட்டுபுரை தெருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் வைத்து எங்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினோம். ஆனால் அதன்பிறகு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக சந்தேகிக்கிறோம். 
எனவே இதுதொடர்பாக வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்’’ என்றனர். 

Next Story