இந்திய விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் - இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்


இந்திய விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் - இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்
x
தினத்தந்தி 14 Sept 2021 2:16 AM IST (Updated: 14 Sept 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விண்வெளித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

பெங்களூரு:

நேரடி முதலீட்டு கொள்கை

  இந்திய தொழில் கூட்டமைப்பு, ஆன்ட்ரிக்ஸ், இஸ்ரோ, என்.எஸ்.ஐ.எல். ஆகியவை சார்பில் சார்பில் விண்வெளி தொடர்பான சர்வதேச விண்வெளி மாநாடு மற்றும் கண்காட்சி டிஜிட்டல் முறையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

  இந்தியாவில் விண்வெளித்துறையில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும், முதலீடு செய்யவும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எங்களின் விண்வெளி தொடர்பான அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை திருத்தி அமைக்கிறோம். இந்த திருத்திய கொள்கை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும்.

விண்வெளி தொழில்நுட்பங்கள்

  இது இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இடையே ஒரு நிலையான தொடர்பை ஏற்படுத்தும். இதனால் இரு தரப்பு நிறுவனங்கள் பயனடையும். 40 தனியார் துறை நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதாவது செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், விண்வெளி தொழில்நுட்பங்கள் உருவாக்குவது குறித்து தொடர்பில் இருக்கிறோம். அந்த நிறுவனங்களின் வரைவு திட்டங்களை பரிசீலித்து வருகிறோம்.
  இவ்வாறு கே.சிவன் பேசினார்.

  இஸ்ரோவின் துணை நிறுவனமான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மையத்தின் தலைவர் பவன் கோயங்கா பேசுகையில், "இந்திய விண்வெளி விஞ்ஞானிகள், குறைந்த செலவில் நவீன விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள். இது என்னை ஈர்ப்பதாக உள்ளது. நமது நாடு விண்வெளித்துறையில் முன்னணியில் இருந்தபோதும், உலகின் 440 பில்லியன் டாலர் விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா விண்வெளித்துறையின் பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு வினியோகம் செய்ய கட்டுப்பாடற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெறாதது ஏன் என்பது குறித்து நான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது" என்றார்.

Next Story