பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்; 4 பேர் கைது
யாதகிரி அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டாக கற்பழித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்வாண வீடியோ வெளியானதால் 4 பேரும் சிக்கி இருந்தனர்.
பெங்களூரு:
பெண் கூட்டாக கற்பழிப்பு
யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண், சகாபுரா டவுனில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சை எதிர்பார்த்து காத்து நின்றார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர், அந்த பெண்ணை கடத்தி சென்றனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்று, அங்கு வைத்து அந்த பெண்ணை 4 பேரும் நிர்வாணப்படுத்தியதாக தெரிகிறது.
மேலும் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த பெண்ணை அடித்து, உதைத்து தாக்கியதுடன், அவரது உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த ரூ.5 ஆயிரம், ஒரு செல்போனை கொள்ளையடித்து விட்டு, நடந்த சம்பவங்களை வெளியே செல்லக்கூடாது என 4 மர்மநபர்களும் எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்கள்.
வீடியோ வெளியானது
இந்த கற்பழிப்பு சம்பவம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தது. இதுபற்றி அந்த பெண் போலீசில் எந்த ஒரு புகாரும் தெரிவிக்காமல் இருந்திருந்தார். இதனால் பெண் கற்பழிக்கப்பட்டது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதற்கிடையில், யாதகிரியில் கடந்த 2 நாட்களாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, அவரை அடித்து துன்புறுத்துவது, சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. இதுபற்றி சகாபுரா டவுன் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.
அந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தன்னை 4 பேர் கடத்தி சென்று கற்பழித்ததாகவும், தன்னிடம் பணம், செல்போனை கொள்ளையடித்ததாகவும் கூறினார்.
4 பேர் கைது
இதையடுத்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த நிலையில், பெண்ணை கற்பழித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் நிங்கராஜ் ஹலேபேடி, பீமா சங்கர், அய்யப்பா, சரணு மமதாபூர் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவா், போலீஸ் துறையில் டிரைவராக பணியாற்றி வந்ததும், ஒரு ஆண்டுக்கு முன்பாக வேலையை விட்டு நின்றதும் தெரியவந்தது.
கைதான 4 பேரும் அந்த பெண்ணை கற்பழித்து சித்ரவதை செய்வதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்திருந்ததும், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதால், அவர்கள் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது. கைதான 4 பேர் மீதும் சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் யாதகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
பெண் கூட்டாக கற்பழித்து சித்ரவதை செய்த சம்பவம் பற்றி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறும் போது, ‘யாதகிரியில் பெண்ணை கூட்டாக கற்பழித்த சம்பவம் 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது ஆகும். இருப்பினும் சம்பவம் வெளியே தெரிந்த உடனே 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.
இதுகுறித்து யாதகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "பெண்ணை கடத்தி நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் புகார் அளிக்காததால் இந்த சம்பவம் தாமதமாக வெளியே வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடத்துவதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.
Related Tags :
Next Story