ஆத்தூர் அருகே பயங்கரம்: தாத்தா-பாட்டி உயிரோடு எரித்துக்கொலை-வீட்டை பூட்டி தீ வைத்த சிறுவன் கைது


ஆத்தூர் அருகே பயங்கரம்: தாத்தா-பாட்டி உயிரோடு எரித்துக்கொலை-வீட்டை பூட்டி தீ வைத்த சிறுவன் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 2:44 AM IST (Updated: 14 Sept 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே தாத்தா-பாட்டி உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வீட்டை பூட்டி தீ வைத்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே தாத்தா-பாட்டி உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வீட்டை பூட்டி தீ வைத்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தாத்தா- பாட்டி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார்நகரை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 75). இவருடைய மனைவி காசியம்மாள் (65). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் தேசிங்கு முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர்.
காட்டுராஜாவும், காசியம்மாளும் மட்டும் அங்குள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இருவரும் வீட்டை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்க சென்றனர். நள்ளிரவு நேரத்தில் காட்டுராஜாவின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. 
அலறல் சத்தம்
இதில் திடுக்கிட்டு விழித்த காட்டுராஜாவும், காசியம்மாளும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டு அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. காட்டுராஜாவின் கூரை வீடு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ வேகமாக எரிந்தது. இதுபற்றி ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தம்பதி சாவு
இதற்கிடையே தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் காட்டுராஜாவும், அவருடைய மனைவியும் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று அபய குரல் எழுப்பினர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து ஆத்தூர் போலீசாரும் விரைந்து வந்தனர்.அதற்குள் காட்டுராஜா தீயில் கருகி வீட்டுக்குள்ளேயே பிணமானார். அவருடைய மனைவி காசியம்மாள் தீயில் கருகி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதியவர் வீடு தீப்பற்றி எரிந்தது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால் காட்டுராஜாவின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஒவ்வொருவராக விசாரணை நடத்திய போது, காட்டுராஜாவின் 16 வயது பேரன் ஒருவன் போலீசாரை கண்டதும் பயந்த சுபாவத்தில் இருந்தான்.
சிறுவன் கைது
அவனை போலீசார் ஆத்தூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், தாத்தா- பாட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். உடனே போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது சிறுவன் கூறிய தகவல்கள் விவரம் வருமாறு:-
அந்த 16 வயது சிறுவன் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லாமல், நண்பர்களுடன் சுற்றி திரிந்துள்ளான். இதனை காட்டுராஜாவும், அவருடைய மனைவியும் கண்டித்துள்ளனர். மேலும் உன்னுடைய பெரியப்பாவை பார், அவரை போன்று நன்றாக உழைத்து முன்னேற வழியை பார் என்று அடிக்கடி அறிவுரை கூறி வந்துள்ளனர்.
பரபரப்பு
இது அந்த சிறுவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எப்போது பார்த்தாலும் நம்மை ஏதாவது சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இவர்களை என்ன செய்வது என யோசித்த சிறுவனுக்கு கொடூர யோசனை ஏற்பட்டுள்ளது. அதாவது தாத்தா- பாட்டியை உயிரோடு விடக்கூடாது. விட்டால் இப்படித்தான் ஏதாவது சொல்லி திட்டிக்கொண்டு இருப்பார்கள் என நினைத்தான். 

Next Story