திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
x
தினத்தந்தி 14 Sept 2021 9:13 PM IST (Updated: 14 Sept 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர்:
முழுநேர அன்னதான திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை வந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், கோவில் வளாகம் மற்றும் அன்னதான மண்டபத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எளிதாக தரிசனம்

தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனையின்பேரில் கடந்த 4-ந் தேதி நடந்த இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் தனியார் மற்றும் இந்து அறநிலையத்துறை நிதியோடு பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
அதேபோல், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். இதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடியாக பணிகளை மேற்கொள்ள அவர் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

விரைவில் திருப்பணிகள்

அதன்படி, பணிகளை நிறைவேற்றுகின்ற குழு, அறிக்கை தயாரித்து வருகின்றது. அந்த வரைவு அறிக்கை இறுதியானவுடன் முதல்-அமைச்சரை சந்தித்து அவருடைய உத்தரவு பெற்று வெகுவிரைவில் இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்படும்.
மேலும், பக்தர்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். அதேபோல், பக்தர்கள் புகாரையடுத்து வி.ஐ.பி. தரிசனத்தை கட்டுப்படுத்துவதற்காக நாளை (அதாவது இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அர்ச்சகர்கள் கோவிலில் சிப்ட் முறையில் பணியாற்றுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முழுநேர அன்னதான திட்டம்

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோவில்களுக்கு அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதாவது முழுநேர அன்னதான திட்டமாக காலை, மாலை, இரவு என சன்னிதானம் மூடுகின்ற வரை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் கடைகளை தேடி பசியோடு அலைய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தமிழகத்தின் பசி தீர்க்கும் மா மருந்தாக முதல்-அமைச்சர் செயல்படுகிறார். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் காணொலி மூலம் 16-ந் தேதி (நாளை) தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பணிகளை ஆய்வு செய்தோம்.

விளாத்திகுளத்தில் கல்லூரி

விளாத்திகுளத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் கலை கல்லூரி விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் உள்ள அர்ச்சகர் பள்ளியை புனரமைப்பு செய்து அனைத்து வசதிகளோடு நவீன அர்ச்சகர் பயிற்சி பள்ளியாக உருவாக்கி, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அப்போது இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோசாலி, கோவில் தர்க்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தாசில்தார் (பொறுப்பு) ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம்,
தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் எஸ்.ஏ.செந்தில்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் அருணகிரி, சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story