திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்
x
தினத்தந்தி 14 Sep 2021 3:56 PM GMT (Updated: 14 Sep 2021 3:56 PM GMT)

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தனபாலன் தலைமையில் துணை தலைவர் தண்டபாணி, செயலாளர் கார்த்திக்வினோத், பட்டியல் அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட அந்த கட்சியை சேர்ந்தவர்கள், நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் பாதாள சாக்கடை பிரிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட மறுத்தனர். 
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story