அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உரிய முறையில் வாங்காததால் விவசாயிகள் அவதி


அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உரிய முறையில் வாங்காததால் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 14 Sept 2021 9:57 PM IST (Updated: 14 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உரிய முறையில் வாங்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர், அகரம், பிஞ்சிவாக்கம், புதுமாவிலங்கை, செஞ்சிபானம்பக்கம், பிலிப்பிஸ்புரம், வேப்பஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய தொழில் விவசாயமாகும்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல் பயிர்களை புதுமாவிலங்கை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெற்பயிர்களை உரிய முறையில் பெறாமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் மேம்பாலத்தின் மீது பிஞ்சிவாக்கம், அகரம், புதுமாவிலங்கை, வேப்பஞ்செட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விளைந்த நெல் மூட்டைகளை மேம்பாலத்தில் கொட்டி காய வைக்கிறார்கள்.

விவசாயிகள் கோரிக்கை

நெல் மூட்டைகளை முறையாக பெறாத காரணத்தால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மேம்பாலத்தின் மீது நெல் மூட்டைகள் குவியல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலை உள்ளது.

எனவே விவசாயிகளின் நெல்களை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story