முத்துமாரியம்மன் சிலை பிரதிஷ்டை


முத்துமாரியம்மன் சிலை பிரதிஷ்டை
x
தினத்தந்தி 14 Sep 2021 5:02 PM GMT (Updated: 14 Sep 2021 5:02 PM GMT)

திருமுருகன் பூண்டியில் செதுக்கப்பட்ட முத்துமாரியம்மன் சிலை பிரான்ஸ் நாட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

அனுப்பர்பாளையம்
திருமுருகன் பூண்டியில் செதுக்கப்பட்ட முத்துமாரியம்மன் சிலை பிரான்ஸ்  நாட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. 
சிற்ப கலைக்கூடம்
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் பழனிவேல் சிற்பக்கலைக்கூடம் 4 தலைமுறைகளாக  250 ஆண்டுகளாக கருங்கற்களால் ஆன கலைநயமிக்க சாமி சிலைகளை செதுக்கி வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சிலைகளை ஏற்றுமதி செய்து திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழிலுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பிரசிடெண்ட் வில்சன் என்ற இடத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட  முத்து மாரியம்மன் அம்பாள் கோவிலுக்கு முத்துமாரியம்மன் சிலையை வடிவமைத்து தருமாறு திருமுருகன்பூண்டி ஸ்ரீதிருமுருகன் பழனிவேல் சிற்பக்கலைக்கூட நிர்வாகத்திடம் கோவில் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 
இதையடுத்து சிற்பி  குமாரவேல் தலைமையில் சிற்பி சங்கர் உள்ளிட்ட குழுவினர் 1 டன் எடை கொண்ட கருங்கல்லில் 4½ உயரத்தில் முத்துமாரியம்மன் சிலையை தத்ரூபமாக செதுக்கி கடந்த மாதம் விமானம் மூலமாக பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். 
கும்பாபிஷேகம்
இந்த நிலையில் அங்குள்ள கோவிலில் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வாழ் தமிழர்களும், இந்தியர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து சிற்பி குமாரவேல் கூறும்போது, பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சிலைகளை செதுக்கி இருந்தாலும், தற்போது எங்கள் கைகளால் செதுக்கப்பட்ட சிலை பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதாக இருப்பது மட்டுமின்றி, திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழிலுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்று கூறினார்.




Next Story